ஒரே மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தி அதை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும் என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்கள் அனைவரும் தங்களின் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு பற்றி அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலை மீண்டும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் விலை ரூ.710 ஆக அதிகரித்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே டிசம்பர் 1ஆம் தேதி சிலிண்டர் விலையை 50 ரூபாய் உயர்த்தி இருந்த நிலையில், ரூ.660 ஆக இருந்தது. கடந்த 15 நாட்களில் சிலிண்டர் விலை 100 ரூபாய் அதிகரித்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்பதிவு செய்யும் போது பழைய விலையாக இருந்தாலும், புதிய விலைக்கே சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரே மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 100 ரூபாய் உயர்த்தியது மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். பொருளாதார வீழ்ச்சி, தவறான கொள்கை முடிவுகளால் மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். குடும்ப பெண்களின் சார்பாக பாஜக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.