சிவகங்கை பழையனூர் சுந்தரமகாலிங்கம் கோவிலில் நேற்று முன்தினம் தேர் திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பழையனூர் கிராமத்தில் சந்தன கருப்பண சாமி, அங்காள ஈஸ்வரி உடனமர் சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஐந்து நாட்கள் கோலாகலமாக திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் மார்ச் மாதம் 11-ஆம் தேதி காப்பு கட்டுதலும், கொடியேற்றமும் தொடங்கியது. அதனை தொடர்ந்து பரிவார தெய்வங்கள் மற்றும் அம்மனுக்கு தினமும் அலங்காரம், அபிஷேகம் பூஜைகள் நடைபெற்று வந்தது.
சென்ற 12-ஆம் தேதி அன்று அங்காளஈஸ்வரி அம்மன் சிம்ம வாகனத்திலும், சுந்தரமகாலிங்க பிரியாவிடையுடன் காளை வாகனத்திலும் எழுந்தருளி திருவீதி உலா வந்து காட்சி அளித்தனர். இந்த கோவில் திருவிழாவில் தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதை முன்னிட்டு அம்மன், சுவாமி பிரியாவிடையுடன் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளியுள்ளார். அதனைத் தொடர்ந்து 4 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தேரை இழுத்து சுவாமியை தரிசித்தனர். மாலை 6.30 மணி அளவில் திருத்தேர் அதன் நிலையை வந்தடைந்தது.