சிவகங்கை பிரான்மலையில் உள்ள பாலமுருகன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் தூக்கி ஊர்வலமாக சென்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிரான்மலையில் சிறப்பு வாய்ந்த பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் 2500 அடி உயரம் உடையது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் வருடந்தோறும் பால்குடம் எடுப்பது வழக்கம். அதேபோல் இந்த வருடம் முருகப்பெருமானுக்கு, கொடுங்குன்றநாதர் குயில அமுத நாயகி அம்மன் கோவிலின் வெளியே உள்ள மண்டபத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பால்குடங்கள் முருகப்பெருமானின் சன்னதி முன்பு ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
அந்த பால் குடங்களுக்கு சிறப்பு பூஜை குன்றக்குடி ஆதினம் பொன்னம்பல அடிகளார் தலைமையில் நடைபெற்றது. அதன் பின் பால் குடத்தை தூக்கி கொண்டு பக்தர்கள் பிரான்மலை பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்றனர். இந்த பால்குடம் ஊர்வலத்தில் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் சிவபுரி சேகர், பூமிநாதன், கதிர்காமம், பிரான்மலை ஊராட்சி மன்ற தலைவர் ராமசுப்பிரமணியம், அ.தி.மு.க. கிளைச் செயலாளர் கருப்பையா உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.