சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
சிவகாசியில் பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி ஆலைகள் என பல்லாயிரம் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. தொழில் நகரமாக கருதப்படும் சிவகாசிக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வர்த்தகர் கள் தொழில் ரீதியாக வந்து செய்கின்றார்கள். சென்ற வருடம் அக்டோபர் மாதத்தில் சிவகாசி நகராட்சியுடன் திருத்தங்கல் நகராட்சி இணைக்கப்பட்டு புதிய நகராட்சி அமைக்க பட்டது. விருதுநகரில் இருந்து சிவகாசி வருபவர்கள் திருத்தங்கல் வழியாகத்தான் வரவேண்டும்.
சிவகாசியில் இருந்து தொழில், கல்வி ரீதியாக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாகனங்களில் திருத்தங்கலை கடந்து செல்ல வேண்டும். மேலும் சிவகாசி மேற்கு பகுதியில் வசிக்கும் பொது மக்கள் அத்தியாவசிய பணிக்காக சிவகாசிக்கு வரவேண்டும். இவ்வாறு இரண்டு சாலைகளும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. இந்த இரண்டு சாலைகளிலும் ரயில்வே கிராசிங் இருக்கின்றது.
ரயில்கள் செல்லும் நேரத்தில் இந்த இரண்டு பகுதிகளிலும் ரயில்வே கேட் கண்டிப்பாக அடைக்கப்படும். இதனால் அங்கு வாகனங்கள் அணிவகுத்தவாறு நீண்ட தூரம் நிற்கும். குறைந்தது அங்கு அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதனால் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக சென்ற 10 வருடங்களுக்கு முன்பாக சிவகாசி சாட்சியாபுரம், திருத்தங்கல் உள்ளிட்ட இரண்டு பகுதிகளிலும் ரயில்வே கிராசிங் பகுதிகளில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அப்போதைய எம்.பி மாணிக்கம் தாகூர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
பின் அதற்கான பணிகள் மும்மரமாக தொடங்கிய நிலையில் சிலர் மேம்பாலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கானது ஒரு வருடம் நீடித்தது. தற்பொழுது அப்பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணி ஆரம்பமாகியுள்ளது. இதனிடையே சுரங்கப்பாதை அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் கூடுதல் கவனம் செலுத்தி போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.