இந்துக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு முக்கிய திருநாள் சிவராத்திரி. நாட்டில் மிக பெரிய சிவ தளங்கள் பல உள்ளன. ஒவ்வொரு பகுதிகளிலும் கட்டப்பட்டுள்ள சிவ தளங்கள் அப்பகுதி மற்றும் அந்த தளம் கட்டப்பட்டப்போது அங்கு பின்பற்ற மக்களின் கலாச்சாரங்கள் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளன.
ஆனால் அணைத்து தளங்களிலும் சிவ ராத்திரி திருநாளை கொண்டாடும் விதம் எல்லா பகுதிகளில் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே உள்ளன. மகா சிவராத்திரியை ஆண்டு தோறும் மாசி மாதம் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தி திதியில் இரவில் கொண்டாடப்படுகிறது. இதற்காக மக்கள் விரதம் இருக்கும் முறைகளும் கூறப்பட்டுள்ளது.
மகா சிவராத்திரி நாளில் பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து சிவனை வழிபடுவார்கள். உலகம் முழுக்க உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும். மகிமை மிக்க இந்த மகா சிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் என்றும் கூறப்படுகிர்து. இந்த நாளின் சிறப்புகள் குறித்து திருவிளையாடற்புராணம், கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவராத்திரி தோன்றிய வரலாறு
மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. பிரளய காலத்தின் போது பிரம்மனும் அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில் இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள்.
பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே – அதாவது `சிவராத்திரி‘ என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள். சிவராத்திரி அன்று சூரியன் மறைந்தது முதல் – மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை தங்களை (சிவனை) பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும், அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள்.
சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே `சிவராத்திரி‘ என வழங்கப்பட்டு, அனைவராலும் கொண்டாடப்படுகிறது. பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று. நள்ளிரவு நேரத்தில் சிவனை வழிபடுவது பல நன்மைகளைத் தரும்.