கனடாவில் வாழும் பூர்வக்குடியின பெண்கள் பலர் கொலை செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு நீதி கிடைக்க பெண்கள் நேற்று சிவப்பு நிற உடை அணிந்து அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுபான்மையினரை, வலியவர்கள் தாக்கும் சம்பவங்கள் உலகின் பல்வேறு இடங்களில் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. இதனால் எளியோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்த கொடுமைகள் கனடாவில் வாழும் பூர்வகுடியினருக்கும் நிகழ்கிறது. அதிலும் குறிப்பாக பூர்வகுடியின பெண்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது வரை கடந்த அரை நூற்றாண்டு காலமாக ஆயிரக்கணக்கில் பெண்கள் மாயமாவதும், கொலை செய்யப்படுவதும் தொடர்ந்திருக்கிறது. எனினும் அதற்கான வழக்குகள் தற்போது வரை விசாரிக்கப்படாமல் இருப்பது வேதனையளிக்கிறது. கடந்த 2007ஆம் வருடத்தில் Robert Pickton என்ற சீரியல் கில்லர் பூர்வகுடியின பெண்கள் சுமார் 49 பேரை கொலை செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டதை உதாரணமாகக் கூறலாம்.
மேலும் அவர்கள் பூர்வக்குடியின பெண்கள் தானே என்று காவல்துறையினர் அலட்சியமாக நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பதால் இது போன்ற கொலைகள் வருடக்கணக்கில் தொடர்கிறது என்று பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்களை நினைவுகூறும் வகையில் கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பல்வேறு பகுதிகளில் நேற்று சிவப்பு நிற ஆடைகள் தொங்கவிடப்பட்டிருந்ததோடு, பல பெண்கள் சிவப்பு நிற ஆடை உடுத்தி அவர்களுக்கு நியாயம் கிடைக்க அரசு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கனடா மற்றும் அமெரிக்க நாடுகளில் மே மாதம் 5 ஆம் தேதி அன்று பாதிக்கப்பட்ட பூர்வகுடியின பெண்களை நினைவு கூறும் வகையில் தேசிய விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்படுகிறது.