சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தில் நடத்திய தடியடி குறித்து முதல்வருடன் சென்னை மாநகர காவல் ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள சி.ஏ.ஏ சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. முஸ்லீம்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினரும் பழைய வண்ணாரப்பேட்டையில் கூடி இருந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதனால் போராட்டக்காரர்களை கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தினர். அந்த தடியடியில் மூன்று நபருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்தத் தகவல் பரவியதால் கிண்டி கத்திபாரா பகுதியில் சிலர் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், தடியடியை கண்டித்து மதுரை மற்றும் தேனியில் இன்று காலை முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
மேலும் நீலகிரி குன்னூரில் கடையடைப்பு போராட்டம், திருச்செந்தூர் காயல்பட்டினத்தில் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் என தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. கலவரம் அதிகரிக்காமல் இருக்க காவல்துறையினர் அங்கே குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் போராட்டம் நடத்திய இஸ்லாமிய அமைப்பினருடன் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனை தொடர்ந்து சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தில் நடத்தப்பட்ட தடியடி தொடர்பாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் காவல் ஆணையர் சந்தித்துள்ளார். தடியடி நடத்தியது குறித்தும், மேலும் போராட்டம் தீவிரம் அடையாமல் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே சென்னை மேற்கு காவல் இணை ஆணையர் விஜயகுமாரி கல்வீச்சில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.