தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிக்களூர் அண்ணாநகரில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 19-ஆம் தேதி கந்தசாமி மோத்தக்கல்லில் இருக்கும் வங்கி ஒன்றிலிருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம், 3 கிராம் தங்க மோதிரம், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை ஒரு பையில் வைத்துக்கொண்டு மொபட்டில் திருவண்ணாமலை- நரிப்பள்ளி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த வாலிபர் தன்னை சி.ஐ.டி போலீஸ் என அறிமுகப்படுத்திக்கொண்டார்.
இதனையடுத்து வாகனத்தின் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என அந்த வாலிபர் கூறினார். இதனை நம்பி கந்தசாமி பணத்துடன் வைத்திருந்த பையை அவரிடம் கொடுத்தார். அப்போது கோட்டப்பட்டி காவல் நிலையத்திற்கு வந்து பையை பெற்று செல்லுமாறு கூறிவிட்டு வாலிபர் அங்கிருந்து சென்றார். இதனால் கந்தசாமி கோட்டப்பட்டி காவல் நிலையத்திற்கு சென்று கேட்டுள்ளார். அப்போது தான் அந்த வாலிபர் போலீஸ் இல்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து கந்தசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் குமாரம்பட்டி பகுதியை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவர் போலீஸ் என கூறி முதியவரிடம் இருந்து நகை மற்றும் பணத்தை அபேஸ் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அலெக்ஸ் பாண்டியனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 97 ஆயிரம் ரூபாய் பணம், திருடிய பணத்தில் வாங்கிய 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.