விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக வில் இருந்து அமமுக கட்சிக்கு சென்ற ராஜவர்மனை ‘சீட்டு கிடைக்காததால், அடுத்த கட்சிக்கு ஓடினாயா’ என்று பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த சில நாட்களாகவே, அவருடைய மேடைப்பேச்சுக்கள் மற்றும் கருத்துகள் அனைத்தும் சர்ச்சைக்குரியவையாக கருதப்படுகிறது. தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சித் தலைவர்களும் வாக்குகளை சேகரிக்க , பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதற்கு அமைச்சர் கே .டி .ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கி நடத்தினார். அவர் பேசியபோது , விருதுநகர் மாவட்டத்தில் அதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற வேண்டும் என்றும் ,ஒரு தொகுதியில் போட்டியிடும் பாஜக அணியும் வெற்றி பெற வைக்க வேண்டும் ,என்று கூறினார். ‘அதிமுக -வை அழிக்க நினைக்கும் திமுக கட்சியை நாம் வேரோடு அழிக்க வேண்டும் ‘என்று வீர வசனங்களை பேசினார்.
அதோடு ‘அதிமுகவினர் உழைப்பை மட்டுமே நம்பி வாழக் கூடியவர்கள்’ என்றும், ‘திமுகவினர் பிறரை சார்ந்து பிழைப்பவர்கள் ‘என்று அடுக்குமுறை வசனங்களை பேசியுள்ளார். இதன்பிறகு அமமுக கட்சிக்கு சென்ற முன்னாள் அதிமுக உறுப்பினரான ராஜவர்மன், ‘சீட்டு கிடைக்காததால் ஓடி விட்டாயா ‘என்று கடுமையாக விமர்சித்து ,அவரை கொச்சைப்படுத்தி பேசினார். இவ்வாறு திமுகவையும் கடுமையாக விமர்சித்துப் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.