சென்னையில் உள்ள ஆவடி அடுத்த பட்டாபிராம் எம் ஜி ரோடு 3-வது குறுக்கு தெருவை சேர்ந்த முருகையன்(68) என்பவர் வசித்து வருகிறார். முருகையன் கடந்த 2013 -ஆம் வருடம் முதல் 2015 -ஆம் வருடம் வரை பட்டாபிராம் காமராஜர் தெருவை சேர்ந்த முருகன் – நிர்மலா தம்பதியினரிடம் 10 லட்சம் வரை சீட்டு கட்டி வந்துள்ளார். இந்நிலையில் முருகையன் சீட்டு முடிந்ததை தொடர்ந்து அந்த தம்பதியினரிடம் சென்று பணத்தை கேட்டுள்ளார். அப்போது பணம் தருகிறேன் எனக் கூறி அந்த தம்பதியினர் கடந்த 2015 -ஆம் வருடம் திடீரென வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முருகையன் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பெயரில் வழக்கு பதிந்த காவல்துறையினர் முருகன் மற்றும் அவரது மனைவி நிர்மலா ஆகியோரை தேடி வந்தனர். இந்நிலையில் முருகன் மற்றும் அவரது மனைவியும் பெங்களூருவில் தலைமறைவாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பாலன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் பெங்களூர் சென்று ஏழு வருடங்களாக தலைமுறைவாக இருந்த முருகன் மற்றும் அவரது மனைவியை கைது செய்து ஆவடிக்கு அழைத்து வந்துள்ளனர். அதன்பின் அவர்களை கைது செய்து நேற்று காலை பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் முருகன் மற்றும் அவரது மனைவி நிர்மலா முருகையின் உட்பட அதே பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்களிடம் சீட்டு பணம் வசூலித்து மொத்தம் 37 லட்சம் ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.