தற்போது இணையவழி விற்பனை நிறுவனங்கள் வாயிலாகதான் அதிகளவில் “சீட்பெல்ட்” எச்சரிக்கை தடுப்புக்கருவி விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக சீட்பெல்ட் அணியாமல் காரை இயக்கினால் ஓட்டுநரை எச்சரிக்கும் அடிப்படையில் ஓசையெழுப்பியபடி ஒளிரும் சிறிய எச்சரிக்கை விளக்கு எரியும். ஆனால் இதை விரும்பாத பலா் இந்த எச்சரிக்கையை தடுக்கும் கருவியை வாங்கி காா்களில் பொருத்துகின்றனா். இதன் காரணமாக சீட்பெல்ட்டை அணியவில்லை எனில் எந்த விதமான எச்சரிக்கையும் அவர்களுக்கு இருக்காது என்பது கவனிக்கத்தக்கது.
சமீபத்தில் மகாராஷ்டிரத்தில் பிரபல தொழில் அதிபா் சைரஸ் மிஸ்திரி சாலை விபத்தில் இறந்தார். அதி வேகமாக சென்று சாலைத் தடுப்பில் மோதிய காரில் பின்இருக்கையில் இருந்த அவா் சீட்பெல்ட் அணியாததுதான் அவரது உயிரிழப்புக்கு முக்கியக் காரணம் என தெரியவந்தது. அதன்பின் சாலைப் பாதுகாப்பு பற்றி மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் துவங்கியுள்ளது.
அந்த அடிப்படையில் சீட்பெல்ட் எச்சரிக்கை தடுப்புக் கருவி விற்பனையை முற்றிலுமாக தடைசெய்ய வேண்டும் என மத்திய நுகா்வோா் விவகாரத்துறை அமைச்சகத்துக்கு சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. பின் இருக்கையில் உள்ளவர்கள் சீட்பெல்ட் அணியாமல் இருந்தாலும் எச்சரிக்கை விடுக்கும் விதமாக காா்களில் வசதி ஏற்படுத்த வேண்டும் என தயாரிப்பு நிறுவனங்களுக்கு வலியுறுத்தி இருப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சா் நிதின் கட்கரி ஏற்கெனவெ தெரிவித்துள்ளாா்.