புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விஷயத்தில் காங்கிரஸ் – பாஜக என அதிரடி அரசியல் அனல் பறக்கின்றது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிடம் படுதோல்வி அடைந்த பின் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதன் பின் சோனியாவே கட்சியின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால் என்றாவது ராகுல் மீண்டும் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையில் இடைக்காலத் தலைவர் என பெயர் சூட்டிக் கொண்டார். ஆனால் ராகுலோ அதைப் பற்றி துளியும் நினைக்காமல் எப்பவும் போல் பாஜக அரசு மீது விமர்சனக்களை அடுக்கிக்கொண்டே செல்கிறார்.
ராகுலால் சலசலப்பு:
கொரோனா ஊரடங்கு காலத்திலும் பலரிடம் பொருளாதாரம் பற்றிய விவாதங்களை நடத்துகிறார். இது அந்த கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். கட்சியில் முக்கிய தலைவர்களாக இருக்கும் பொருளாதார அறிஞ்சர்கள் ப.சிதம்பரம் மற்றும் மன்மோகன் சிங்கிடம் ஒரு வார்த்தை பற்றி கூட நாட்டின் பொருளாதாரம் பற்றி ராகுல் பேசவில்லை என காங்கிரஸ் கட்சியினரே வேதனை படுவதாக சொல்லப்படுகின்றது. ராகுலின் நிலைமை இப்படி இருக்க சோனியா காந்தியோ ப்ரியங்காவை அரசியல் களத்தில் இறக்கத் திட்டமிட்டு அதற்கான பணியையும் முன்னெடுத்து வருகின்றார்.
அண்ணனுக்குத் தப்பாத தங்கை:
அண்ணனுக்குத் தப்பாத தங்கை போல் அவரும் எதைச் செய்தாலும் ஏட்டிக்குப் போட்டியாய்த் தான் முடிகிறது. உத்திர பிரதேசத்தில் கொரோனா ஊரடங்கு அமுலில் இருப்பதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர் அனுப்பும் விசயத்தில் மாநில அரசு அரசியல் செய்வதாகவும், மாநில முதல்வர் யோகிக்கு தொழிலாளர் மீது அக்கரை இல்லை எனவும் கூறி டில்லி – உபியில் சிக்கித் தவிக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப அனுப்ப 1000 சிறப்புப் பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளோம் என்று பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
யோகி அரசு அனுமதி:
அதற்கு அனுமதி கேட்டு முதல்வர் யோகிக்கு கடிதம் அனுப்பினார். மேலும் காசியாபாத்தில் உள்ள காசிப்பூர் எல்லையில் 500 பேருந்துகளும், நொய்டா எல்லையில் 500 பேருந்துகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் அதனைத் தங்கள் சொந்தச் செலவில் இயக்குவதாகவும் அதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதத்தைக் கண்ட உபி மாநில முதல்வர் ஆதித்ய யோகி உடனடியாக அனுமதி அழைத்தார்.
அரசிடம் ஒப்படைப்பு:
மேலும் அந்த 1000 பேருந்துகளின் ஆவணங்கள் தகுதிச் சான்று ஓட்டுனர் விபரங்கள் அவர்களின் ஓட்டுனர் உரிமச் சான்று போன்ற அனைத்து விபரங்களையும் சேர்த்து ஆயிரம் பேருந்துகளையும் லக்னோவில் ஒப்படைக்குமாறு யோகி அரசு உத்தரவிட்டது. இது பெருத்த சிக்கலை ஏற்படுத்தியதாக கருதிய மாநில காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தியின் செயலர் சந்தீப் சிங் மீண்டும் ஒரு கடிதம் அனுப்பினார். அதில் ஆயிரக்கணக்கானோர் மாநில எல்லையில் உள்ள முகாம்களில் காத்துக் கிடக்கும் போது 1000 காலி பேருந்துகளை லக்னோவுக்கு அனுப்பச் சொல்வது நேரவிரயம் மட்டுமின்றி மனிதாபிமானமற்ற செயல் என்று தெரிவித்திருந்தார்.
ஆவணம் அனுப்பி வைப்பு:
இதை இத்தோடு யோகி விட்டு விடுவார் என நினைத்து, சும்மா பெயருக்காக முதல் கட்டமாக சில வாகனங்களின் ஆவணங்களையும் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் நெருக்கடியான நேரத்தில் இப்படிக் கட்டுப்பாடுகளுடன் நடந்து கொள்வது மாநில அரசுக்கு தொழிலாளர்கள் மீது அக்கறையில்லை என்பதையே காட்டுகிறது. இந்த விசயத்தில் அரசியல் ஆதாயம் தேடாதீர்கள் என பிரியங்கா காந்தியும் எச்சரித்தார். இதையடுத்து ப்ரியங்கா சார்பில் அனுப்பப்பட்ட சில பேருந்துகளின் ஆவணங்கள் ஓட்டுனர்களின் விபரங்கள் கால தாமதமின்றி உடனடியாக சரிபார்க்கும் பணி யோகி அரசால் நேற்று நடைபெற்றது.
தலையிலடித்துக் கொண்ட உ.பி முதல்வர்:
அப்போது பேருந்துகள் எனக் கூறி டெம்போ சரக்கு வாகனங்கள், ஆட்டோ மற்றும் இரண்டு சக்கர வாகனங்களின் ஆவணங்களும் ஓட்டுனர்களின் காலாவதியான உரிமங்களும் வழங்கப்பட்டு இருப்பதாக சம்பந்தப்பட்ட துறை அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தலையிலடித்துக் கொண்ட மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது காங்கிரஸ் தலைவர்களுக்குத்தான் உண்மையான அக்கறையில்லை. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடவே அவர்கள் விரும்புகின்றனர் எனக் குற்றம் சாட்டினார்.
புலம்பும் பிரியங்கா:
யோகியின் இந்த துரித நடவடிக்கைகளை எதிர்பாராத காங்கிரஸ் கட்சியினரே தர்மசங்கடத்தில் இருப்பதாகவும், ப்ரியங்காவிற்கு இந்த அவமானம் தேவையா எனப் புலம்புகின்றனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாப்பாக ரயிலில் அனுப்பி வைத்து அந்தந்த மாநில அரசுகளிடம் அவர்களை ஒப்படைத்து மருத்துவ ஆலோசனைகளையும் அனைத்து மாநில அரசுகளும் செய்து வரும் வேளையில் “குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க வந்த” காங்கிரசை லாவகமாக யோகி கையாண்டதாக பாஜகவினர் அவரைப் பாராட்டி வருகின்றனர்.
மவுனமாக பிரியங்கா:
ஒரு சில நாட்களுக்கு முன் தான் உபி எல்லையில் இரண்டு லாரிகள் மோதிக் கொண்டதில் 24 பேர் துர்மரணம் அடைந்தனர். இப்படிப்பட்ட நிலையில் எந்த வித ஆவணங்களையும் வாகனங்களின் தரத்தையும் சம்பந்தப்பட்ட அரசு ஆய்வு செய்யாமல் எப்படி பயணிக்க அனுமதிக்க முடியும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் ஆழம் தெரிந்தும் கால் வைத்த ப்ரியங்கா இப்போது என்ன சொல்வது என வாய்மூடி மவுனமாக இருக்கிறாரார்.
கட்சியில் இருந்து நீக்கம்:
இப்படியான பதிவு எண் இல்லாத, போலியான வாகனகள் அனுப்பியது குறித்து விமர்சனம் செய்த காங்கிரஸ் கட்சியின் ரேபரேலி தொகுதியின் எம்எல்ஏ அதிதி சிங், ஒழுங்கு நடவடிக்கை காரணமாக காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி பொதுச்செயலாளர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.