2ஆம் உலகபோருக்கு பின் சீனாவிலிருந்து தைவான் பிரிந்தது. இப்போது தைவான்நாடு, சொந்த அரசியலமைப்பு, ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு போன்றவற்றுடன் தன்னை ஒரு சுதந்திர நாடாக பார்க்கிறது. எனினும் சீனாவோ, தைவானை தன் கட்டுப்பாட்டிலுள்ள தன்னாட்சி பகுதி என கூறிக்கொண்டிருக்கிறது. மேலும் தைவான்நாட்டை தங்களுடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என சீனாவின் அதிபரான ஜின்பிங் தீராத ஆசைகொண்டுள்ளார். ஏனெனில் உலகரங்கில் அமெரிக்காவானது தன்னைமுன்னணியில் நிறுத்திக்கொண்டது போன்று ஆசியாவிலும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என சீனா கருதுகிறது. தைவான் நாட்டை சீனா உடன் இணைக்க படைபலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் என சீனா கூறிவருகிறது.
இருந்தாலும் தைவானுக்கும், அதன் நிலைப்பாட்டுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் ஆதரவுக் கரம் நீட்டி வருகிறார். இது சீனாவுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற சபா நாயகர் நான்சிபெலோசி (82), தன் ஆசியநாடுகள் சுற்றுப் பயணத்தில் தைவானை சேர்த்துக் கொண்டார். அவர் தைவான் நாட்டிற்கு பயணம் செய்வதாக தகவல் வெளியாகியது. உடனடியாக சீனா எதிர்ப்பு தெரிவித்து போர்க் கொடி உயர்த்தியது. இதில் நான்சிபெலோசி தைவானுக்கு சென்றால் அமெரிக்காவானது அதற்குரிய விலையைக் கொடுக்கும் என சீனா எச்சரிக்கை விடுத்தது.
இதுகுறித்து சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் கூறியதாவது “சீனாவின் இறையாண்மை பாதுகாப்பு நலன்களை பலவீனப்படுத்தினால், அதற்குரிய பொறுப்பை அமெரிக்கா ஏற்கவேண்டும். அத்துடன் அதற்கான விலையையும் கொடுக்க வேண்டும்” என கூறினார். இதற்கிடையில் சீனாவின் எதிர்ப்பை மீறி நான்சிபெலோசியின் தைவான் பயணமானது உறுதியாகியது. இதன் காரணமாக உலகரங்கில் பெரும் பரபரப்பு உருவானது. அமெரிக்க நாட்டின் 13 போர் விமானங்கள், ஜப்பானிலுள்ள அமெரிக்க படைத்தளங்களிலிருந்து புறப்பட்டது. இந்த விமானங்கள் நான்சி பெலோசியின் தைவான் பயணத்தின் போது அவரது விமானத்துக்கு பாதுகாப்பாக அணி வகுத்து போகும் என்று தகவல் வெளியாகின.
இந்நிலையில் நான்சிபெலோசி நேற்று மலேசியா சென்றார். அந்நாட்டின் தலைநகரான கோலாலம்பூரிலிருந்து அவரது விமானம் (சி-40பி) தைவான் புறப்பட்டது. நான்சிபெலோசியின் விமானம் தைவான் வான் பரப்புக்குள் சென்றதும் புது பரபரப்பு தொற்றிக் கொண்டது. அவரது விமானத்திற்கு தைவான்போர் விமானங்கள் பாதுகாப்பு அளிக்கும் அடிப்படையில் வானில் வலம் வந்தது. மற்றொருபுறம் சீனாவின் நான்கு போர் விமானங்கள் தைவான் வான்வெளியில் நுழைந்துள்ளது. இத்தனை பரபரப்பு பதற்றத்துக்கு மத்தியில் நான்சிபெலோசியின் விமானம் தைவான் தலைநகரான தைபேயில் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 10:42 மணிக்கு (இந்திய நேரம் நேற்று இரவு 8.12 மணி) தரை இறங்கியது. இதன் காரணமாக அடுத்தது என்ன என்ற பரபரப்பு உலகரங்கில் நிலவுகிறது.