சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் கூறியுள்ளது.
சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. உலகில் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் லட்சக்கணக்கான மனித இழப்புக்களை ஏற்படுத்தி இருக்கின்றது. அதனால் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் தீவிரமாக எடுத்து வருகின்றன. முதலில் ஒருநாள் அதிகம் பரவிய ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
தற்போது வரை உலக அளவில் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 7.67 லட்சத்தை எட்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.15 கோடியாக இருக்கின்றது. மேலும் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1.43 கோடியை கடந்துள்ளது. தற்போது அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மட்டுமே கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்துள்ளன. இந்நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 50 பேர் பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் கூறியுள்ளது. அதனால் சீனாவில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 84,808 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 4,634 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் முதலில் தோன்றிய கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்தது. தற்போது மீண்டும் அந்த சூழ்நிலை உருவாகி விடுமோ என்ற அச்சம் அந்நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.