பிரிட்டனில் இருந்து சீனா திரும்பிய இளம்பெண்ணிற்கு உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. தற்போது கொரோனா தொற்று உருமாற்றம் பெற்று அதிவேகமாக பரவி வருகின்றது. உருமாறிய இந்த புதிய கொரோனா பிரிட்டனில் முதல் முதலில் கண்டறியப்பட்டுள்ளது.
பழைய கொரோனாவை காட்டிலும் இந்த புதிய தொற்று 70% வேகமாக பரவும் என ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. இதனால் பல நாடுகள் அச்சமடைந்து பிரிட்டனுடனான விமான போக்குவரத்தை அதிரடியாக நிறுத்தின. ஆனாலும் இங்கிலாந்தில் மட்டுமல்லாது ஜப்பான், தென்னாபிரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின், சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது உருமாறிய கொரோனா சீனாவிற்கும் படை எடுத்துள்ளது. பிரிட்டனில் இருந்து இளம்பெண் ஒருவர் சீனாவிற்கு திரும்பிய நிலையில் அவருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை உலகம் முழுவதிலும் 1.79 மில்லியன் மக்கள் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில் இந்த உருமாறிய தொற்று மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.