சீனாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால் சீன பயணிகளுக்கு பல்வேறு நாடுகள் கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்கி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவிலும் சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து உலக சுகாதாரத்துறை அமைப்பின் தலைவர் டெட் ரோஸ் அதோனோம் கூறியதாவது, “சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. மேலும் சீனாவில் தொற்றுப் பரவலை கருத்தில் கொண்டு சில நாடுகள் அறிமுகப்படுத்தியுள்ள கட்டுப்பாடுகள் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
இருப்பினும் தொற்று பரவலின் நிலைமை குறித்து சீனா விளக்கம் அளிக்க முன் வர வேண்டும். தற்போது தொற்று பரவல் குறித்த விரிவான தகவல்களும் எங்களுக்கு தேவை. மேலும் கண்காணிக்கவும், அதிக ஆபத்து உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடவும் சீனாவை தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றோம். தொடர்ந்து பேசிய அவர் மருத்துவ பராமரிப்பு மற்றும் அதன் சுகாதார அமைப்பை பாதுகாப்பதற்காக எங்கள் ஆதரவை நாங்கள் சீனாவுக்கு தொடர்ந்து வழங்குகிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.