சீனாவில் பன்றி இறைச்சி சூப்பில் வவ்வால் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் ஹூபெய் மாகாணத்தில் சென் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். குடும்பத்தில் உள்ள நபர்கள் சென்ற பத்தாம் தேதி அருகில் இருக்கின்ற உணவகம் ஒன்றில் பன்றி இறைச்சி சூப் ஆர்டர் செய்திருக்கின்றனர். பின்னர் சூப் வந்ததும் சென்னின் அம்மா சூப் பாத்திரத்தை திறந்து பார்த்தபோது கருப்பாக ஒரு பொருள் கிடந்துள்ளது. அதனை நறுமணத்திற்காக சேர்க்கப்பட்ட வாசனைப் பொருள் எனக் கருதி சூப்பை குடிக்க தொடங்கியுள்ளனர். பாதி சூப்பை குடித்த பிறகு சென்னின் அம்மாவிற்கு சந்தேகம் வலுவாக ஏற்பட்டுள்ளது.
அதனால் ஒரு குச்சியை எடுத்து பாத்திரத்தில் விட்டு அது என்னவென்று பார்க்கும்போது செத்துப்போன வவ்வால் என அறிந்தனர். அந்த வவ்வாலுக்கு இறகு மற்றும் காது இருந்துள்ளது. அதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பாத்திரத்தை உடனடியாக மூடிவிட்டு, உள்ளூர் டிவி சேனலுக்கு தகவல் அளித்துள்ளனர். அங்கு வந்த ஊடகத்தினர் வவ்வால் கிடந்த படத்தை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்தினர். சீனாவில் உயிரினங்கள் விற்கக்கூடிய மார்க்கெட்டில் இருந்து தான் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியது. அதற்கு வவ்வால் முக்கிய காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டது. அதனால் அந்தக் குடும்பத்தினர் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை மேற்கொண்டனர்.
பின்னர் உணவகத்திற்கு சென்று தாங்கள் அளித்த பணத்தை திரும்ப தர வேண்டும் என குடும்பத்தினர் கேட்டபோது, உள்ளூர் உணவு தயார் செய்யும் நிறுவனத்திடம் இருந்துதான் நாங்கள் சூப் கொள்முதல் செய்வோம் என கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தை விசாரணை செய்தபோது, நாங்கள் சமைத்து பாக்கெட் செய்யும் போது இவ்வாறான தவறு நடப்பதற்கு வாய்ப்புகள் எதுவும் இல்லை என கூறியுள்ளனர். கொரோனா காலகட்டத்தில் இத்தகைய சம்பவமானது அந்த குடும்பத்தினருக்கும், சூப் வாங்கும் அனைவருக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.