சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த சில மாதங்களாக கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது பல மடங்கு வேகமாக பரவி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வைரஸை கட்டுப்படுத்த அந்த நாட்டின் பல்வேறு நகரங்களில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஷாங்காய் நகரில் வைரஸை கட்டுப்படுத்தும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
3 வார காலங்கள் இந்த கடுமையான ஊரடங்கு அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில் கட்டுப்பாடுகளை மாகாண அரசு கடுமையாக்கி இருப்பதால் ஷாங்காய் மக்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். வீடுகளிலேயே முடங்கி இருப்பதால் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர். மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போதிய உணவு வழங்கப்படாததால் உணவின்றி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஷாங்காய் நகரில் உணவு இன்றியும் மன உளைச்சலில் இருந்து வந்த நபர் தனது மனைவியை தனது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே தள்ளி விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
மேலும் பல்வேறு இடங்களில் மக்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அரசிற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாட்டில் சில தவறுகளை ஷாங்காய் மாகாண நிர்வாகம் அறிவித்திருக்கிறது. ஆனாலும் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதால் சீனாவின் ஷாங்காய் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.