சீனாவிலிருந்து டிவி,ஏசி உள்ளிட்ட பொருள்களின் இறக்குமதியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியா- சீனா ராணுவ வீரர்கள் இடையே கடந்த மாதம் எல்லையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாக boycottchinaproduct என்ற தலைப்பில் சீனப் பொருட்களை மறுத்து இந்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதேபோல் சீன செயலிகளை தடை விதிக்கவும் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், 59 செயலிகளை மத்திய அரசு முற்றிலுமாக தடை செய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக மற்றொரு தடையையும் அரங்கேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, டிவி, ஏசி உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதியை குறைக்க முடிவு செய்துள்ளதாகவும், சுங்கக் கட்டணங்கள் அனைத்தும் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் உள்நாட்டில் உற்பத்தி செய்பவர்களுக்கு உரிய சலுகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் சீனாவில் டிவி, ஏசி உற்பத்தி செய்ய கூடிய சில நிறுவனங்களுக்கு மட்டும் தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.