Categories
உலக செய்திகள்

சீனாவுடன் பதற்ற சூழல்…. பிரபல நாட்டு அரசியல்வாதிகளை வரவேற்கும் தைவான்….!!

தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என  சீனா சொந்தம் கொண்டாடி வருகின்றது.  அமெரிக்கா, தைவானுடன் நட்புறவை பேணுவதற்கும் சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இந்த சூழ்நிலையில் சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த 2-ஆம் தேதி தைவானுக்கு சென்றார். இதனால் கோபமடைந்த சீனா தைவானை மிரட்டும் விதமாக தைவானை நாலாபுறமும் சுற்றிவளைத்து ஒரு வார காலமாக போர்ப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனால் தைவான்-சீனா இடையே போர்ப்பதற்றம் உச்சக்கட்டத்திற்கு சென்றது. இந்நிலையில் நான்சி பெலோசி தைவானுக்கு சென்ற 12 நாட்களுக்கு பின்னர், அமெரிக்காவின் ஜனநாயக கட்சி எம்.பி. எட் மார்கி தலைமையிலான நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு கடந்த 14-ஆம் தேதி தைவான் சென்றது. 5 எம்.பி.க்களை கொண்ட இந்த குழு தைவான் அதிபர் சாய் இங் வென் மற்றும் அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இந்நிலையில், ஜப்பான் நாட்டின் சுதந்திர ஜனநாயக கட்சியை சேர்ந்த இரு அரசியல்வாதிகளான புருயா கெய்ஜி மற்றும் கிஹாரு மினோரு இருவரும் தைவான் நாட்டுக்கு வருகிற 22- ஆம் தேதி வருகை தருகின்றனர். 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர்கள் தைவான் அதிபர் சாய் இங்-வென்னை சந்தித்து பேசுகின்றனர். இந்த சந்திப்பில் அமெரிக்காவுடன் பாதுகாப்பு வழிமுறைகளை மேம்படுத்துவது பற்றி ஆலோசனை நடைபெறுவதுடன், சீனா மேற்கொண்ட ராணுவ பயிற்சி பற்றிய பார்வைகளையும் இருதரப்பினரும் பகிர்ந்து கொள்கின்றனர். இதனை அடுத்து ஜப்பான் தலைவர்கள் இருவரும் தைவான் துணை அதிபர் லாய் சிங்-தே, பிரதமர் சூ செங்-சாங், சபாநாயகர் யூ சி-குன் ஆகியோரையும் சந்தித்து பேசுகின்றனர். இதன்பின்பு, வெளியுறவு மந்திரி ஜோசப் வூ, தைவான்-ஜப்பான் உறவுகளுக்கான கூட்டமைப்பு தலைவர் சூ ஜியா-சியுவான் ஆகியோரையும் அவர்கள் இருவரும் சந்தித்து பேசுகின்றனர்.

Categories

Tech |