சீனாவுடன் இருக்கும் மோதல் நிலை ஜனாதிபதி தேர்தலில் அதிபர் ட்ரம்ப் வெற்றி பெற்றால் மாறும் ஏனநிபுணர்கள் கருதுகின்றனர்.
சீனாவும் அமெரிக்காவும் மாறி மாறி தூதரகங்களை மூடி கடும் விமர்சனங்களை செய்து வருகின்ற நிலையில், இத்தகைய மோதல் வருகின்ற மாதங்களில் ஒரு ராணுவ மோதலாக உருமாறி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டை உளவு பார்ப்பதாக கூறி டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டனில் இருக்கின்ற சீன தூதரகத்தை அமெரிக்கா மூட உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சீனாவின் செங்டு நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூட சீனா உத்தரவிட்டதுடன், தூதரக அதிகாரிகள் அனைவரும் திங்கட்கிழமை நாட்டைவிட்டு வெளியேறவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தமுறை தம்மை தோற்கடிக்க ஜனாதிபதி தேர்தலில் சீனாவின் பங்களிப்பு இருக்கலாம் என ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கவலை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருந்தாலும் இதுபோன்ற சந்தேகங்கள், இரு நாட்டின் உறவை மேலும் சிக்கலாக்கும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. கட்டுப்படுத்த முடியாத கொரோனா பரவல், தென் சீனா கடல், ஹாங்காங் அரசியல், விசா மோசடி போன்ற பல விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்துவேறுபாடுகளே தற்போது சிக்கலான சூழலில் கொண்டுவந்து நிறுத்தி இருக்கின்றது. இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் சர்வதேச அரங்கில் இரு நாடுகளும் ஒருமித்த கருத்துடனையே செயல்பட்டு வந்துள்ளனர்.ஆனால் அந்த காலகட்டம் முடிவுக்கு வந்துள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
சீனாவை தற்போது கடுமையாக விமர்சிக்கும் டிரம்பின் நிலை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றிபெற்றால் கண்டிப்பாக மாறும் எனவும்,அல்லது தேவையெனில் தேர்தலின் வெற்றிக்கு சீனாவின் உதவியை டிரம்ப் ரகசியமாக கோரலாம் எனவும் சில நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த 50 வருடங்களாக அமெரிக்க தொழிலதிபர்களும் உயரதிகாரிகளும் முன்னெடுத்த சீனா ஆதரவிலையே, அந்த நாட்டை உலகின் இரண்டாவது பொருளாதாரசக்தியாக வளர உதவியது என அமெரிக்காவின் வெளிவிவகார நிபுணர்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.
ரஷ்யாவை எதிர்க்க தங்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கையுடன் 1972 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சன் மேற்கொண்ட சீனா சுற்றுப்பயணமே இரு நாட்டு உறவுக்கு அடிப்படை காரணம் என கூறப்படுகிறது. தொடர்ந்து அடுத்த 7 ஆண்டுகளில் அமெரிக்க நிறுவனங்கள் பல சீனாவின் பொருளாதார சீர்திருத்தங்களின் ஒருபகுதியாக சீனாவுக்குள் நுழைந்தன.இதனால் சீனாவின் கடும்போக்கு அடிப்படைக் கொள்கைகளில் மாறுதல் ஏற்படவில்லை மாறாக பொருளாதார பலமடைந்த சீனா அதன் உண்மையான முகத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி கொண்டிருக்கிறது.