கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை சீன அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக மறைத்து வருகின்றனர் என அமெரிக்க உளவுத்துறை கூறியுள்ளது.
கொரோனா முதலாவதாக தோன்றிய சீனாவின் உகான் நகரில் இருக்கின்ற அதிகாரிகள் பீஜிங்கில் உள்ள மூத்த அதிகாரிகளுக்கு சில வாரங்களாக கொரோனா குறித்த எந்த தகவல்களையும் அளிக்கவில்லை. அதனால் எந்த தகவலையும் சொல்லாமல் சீனா அவர்களை இருட்டில் வைத்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்திருக்கிறது. மேலும் கொரோனா வைரஸ் விவகாரத்தை மூடி மறைக்கும் முயற்சிக்கு மறுக்க முடியாத பல சான்றுகள் இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சீன கம்யூனிஸ்ட் கட்சி கொரோனா வைரஸ் பற்றி அறிந்தபோது, அந்த முழு தகவலையும் உலகின் பிற நாடுகளுக்கு மறைக்க முயற்சி செய்ததாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். சீன அதிபர் கொரோனா பற்றிய முழு தகவல் அறிந்திருந்தும், அதன் நிலைமையை பகிரங்கமாக குறைக்க முயற்சி செய்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கண்டுபிடிப்புகள் அனைத்தும் சீனா மீது ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ந்து கூறிவரும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமைந்துள்ளன.
கொரோனா வைரஸ், சீனாவின் உணவு சந்தையை விட சீனா ஆய்வகத்தில் இருந்து பரவுவதற்கான சாத்தியம் இருப்பதாக டிரம்ப் நிர்வாகம் நீண்ட காலமாக குற்றம் சாட்டி கொண்டிருக்கிறது. ஆனால் அதனை நிரூபணம் செய்ய எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை. மேலும் கடந்த 2003ஆம் ஆண்டில் சீன சார்ஜ் அல்லது கடுமையான சுவாச நோய்க்குறி வெடித்த போது காணப்பட்ட முறைகள் இதில் பொருந்துவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.