2019ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து வெளிப்பட்ட கரோனா வைரஸ் உலகளவில் பெரும் மனிதப் பேரழிவை ஏற்படுத்திவருகிறது. உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பாதிப்பால் 210க்கும் மேற்பட்ட நாடுகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளன. குறிப்பாக, கோவிட்-19 பாதிப்பால் அமெரிக்கா மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. இதுவரை அங்கு சுமார் ஒரு கோடியே 69 லட்சத்து 42 ஆயிரத்து 980 பேர் பாதிப்படைந்துள்ளனர். அவர்களில் 3 லட்சத்து 8 ஆயிரத்து 91 பேர் உயிரிழந்தனர்.
இந்த வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்த போதிலும், அதனை கட்டுப்படுத்த முடியாமல், அந்நாடு தவித்து வருகிறது. இது தொடர்பாக அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியான நியூஸ்மேக்ஸின் ‘வேக் அப் அமெரிக்கா’ நிகழ்ச்சியில் பேசிய அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ, “சீன வைரஸ் மிகவும் பயங்கரமான நோய். சீனாவில் இருந்து இந்த வைரஸை வெளியேற விட்டிருக்கக் கூடாது. ஆனால், வெளியேறிவிட்டது. சர்வதேச அளவில் சீன மக்களை பயணிக்க அனுமதித்தது தவறு.
இதன் காரணமாக தற்போது ஒட்டுமொத்த உலக நாடுகளும் கடும் பாதிப்பைக் கண்டு வருகிறது. இதற்கான பொறுப்பை ஏற்க சீன அரசு தயாராக இல்லை. இதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி நேரடியான பொறுப்பைக் கொண்டுள்ளது.கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை மூடிமறைத்தனர். அவர்கள் இது உலகுக்கு எச்சரித்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அதனை செய்யவில்லை. உலகின் இன்றைய நெருக்கடி நிலைக்கு காரணமான சீனாவைப் புறக்கணிக்க வேண்டும் என்ற அமெரிக்க அரசின் முயற்சிக்கு உலக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதனை மேலும் விரிவுப்படுத்த வேண்டும்.
சீனாவுக்கு சொந்தமான கைப்பேசி செயலிகளை தடை செய்வதன் மூலம் சீன தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு இந்திய அரசு புதிய வழியை காட்டியுள்ளது. நாம் அதனை முன்பே செய்து காட்டினோம். தற்போது நம்மை தொடர்ந்து, பல நாடுகள் அதனை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன.சீன அரசை தனிமைப்படுத்த, மற்ற நாடுகளின் ஒத்துழைப்பையும் பெற வேண்டும். சீன அரசுக்கு எதிராக உலகத்தை கட்டியெழுப்பத் தொடங்கியுள்ளோம். இந்தியா, ஆஸ்திரேலியா என பிற நாடுகளை நீங்கள் பார்த்தால் இதனை உறுதிசெய்துகொள்ள முடியும்” என்றார்.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் அண்மை அறிக்கையின்படி, இதுவரை 7 கோடியே 32 லட்சத்து 92 ஆயிரத்து 455 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 கோடியே 14 லட்சத்து 35 ஆயிரத்து 881 பேர் மீண்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி 16 லட்சத்து 30 ஆயிரத்து 581 பேர் உயிரிழந்தனர். தொற்றுநோயால் மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா இருப்பது குறிப்பிடத்தக்கது.