சென்னையில் மட்டும் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு சீனாவை கடந்துள்ளது அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகாண் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி நிலைகுலைய வைத்துள்ளது. இதன் தாக்கத்தில் சிக்காத நாடே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ள, சூழலில் உலக நாடுகள் இதற்கு எதிரான போராட்டங்களை கடந்த 6 மாதமாக நடத்திக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்கா இதன் பிடியில் சிக்கி சுக்குச்சுக்கு சிதைந்துள்ளது. தினமும்லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் நிலையில், கொத்துக்கொத்தாக மக்கள் செத்து மடிவது வேதனையின் உச்சமாக பார்க்கப்படுகிறத.
இதே நிலைதான் இந்தியாவிலும் நீடிக்கிறது. கொரோனாவுக்கு தப்பதா ஒரு மாநிலமும் இல்லை என்ற வகையில் இந்தியாவை கொரோனா ஆக்கிரமித்து உள்ளது. மொத்த பாதிப்பு 11 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்ற, அதேவேளையில் உயிரிழப்பு 30 ஆயிரத்தை நெருங்குவது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் மகராஷ்டிரா அடுத்தபடியாக தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
தமிழ்நாட்டில் 1.65 லட்சம் பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு, 2500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்ச பாதிப்பு தலைநகர் சென்னையில் 84 ஆயிரத்து 598 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு 1407 பேர் உயிரிழந்துள்ளனர். இது சீனா நாட்டின் மொத்த எண்ணிக்கையை விட அதிகம் என்பது கொரோனா கொடூரத்தின் உச்சம். அதே நேரத்தில் சீனாவைவிட தமிழகத்தில் மிக சொற்ப அளவிலே உயிரிழப்பு எனபது தமிழக சுகாதார கட்டமைப்பை உலகளவில் நிரூபித்துள்ளது. சீனாவில் 83,521 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.