சீனாவில் உள்ள கேளிக்கை பூங்காவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் 13 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் தேசிய தினம் நேற்று முன்தினம் சீனா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. அதனால் நேற்று முன்தினம் தொடங்கி எட்டு நாட்கள் வரை தேசிய விடுமுறை அளிக்கப்பட்டது. கொரோனாவால் மிகக் கடுமையாக பாதிப்படைந்து உள்ள பொருளாதாரத்துக்கு ஊக்கமளிக்க கூடிய வகையில் இந்த விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வகையில் மக்கள் அனைவரும் சுற்றுலா தலங்களை நோக்கி படை எடுத்துள்ளனர்.
இந்நிலையில் சீனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள தையுவான் நகரில் இருக்கின்ற கேளிக்கை பூங்காவில் நேற்று முன்தினம் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் கூடினர்.அப்போது பணி சிற்பங்கள் வைக்கப்பட்டிருந்த கண்காட்சி கூடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த பயங்கரமான தீ விபத்தில் சிக்கி பெண் குழந்தைகள் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திடீரென தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்று காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.