சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பிஎஃப் 7 வேகமாக பரவி வருவதால் பல்வேறு நாடுகள் சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக நடத்த உத்தரவிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளும் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயம் ஆக்கியுள்ளது. மேலும் பிரெஞ்சு மக்கள் சீனாவிற்கு செல்வதை தவிர்க்குமாறு பிரான்ஸ் அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் பிரான்ஸ் சுகாதார அதிகாரிகள் கூறியதாவது, புதிய வகை கொரோனா வைரஸ் மாறுபாடுகளை அடையாளம் காண்பதற்காக சீன பயணிகளுக்கு விமான நிலையத்தில் பிசிஆர் சோதனை நடத்தப்படுகிறது. முன்னதாக ஸ்பெயின் அரசும் சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி சான்றிதழ்களை கட்டாயமாகியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு சுகாதார அமைச்சர் கரோலினா டேரியாஸ், “சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளிலும் இதே போல் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க ஸ்பெயின் அழுத்தம் கொடுக்கும்” என தெரிவித்துள்ளார்.