இன்று பிறந்த நாள் கொண்டாடும் சீமானுக்கு பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குனர் மணிவண்ணன், பாரதிராஜா போன்றவர்களிடம் உதவியாளராக சேர்ந்து பின் இயக்குனராக மாறி தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். திரைப்படங்களை இயக்குவதை நிறுத்தி இருந்தாலும் நடிப்பதை இன்னும் தொடர்கிறார். தனது அரசியல் வாழ்க்கை ஒரு புறம் சென்று கொண்டிருந்தாலும் விஜயை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது ஆனால் இதுவரை அது நிஜமாக வில்லை.
இந்நிலையில் இன்று பிறந்தநாள் காணும் சீமானுக்கு திரைத்துறையினரும் அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் இயக்குனர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் சீமானுக்கு வாழ்த்து கூறியுள்ளார். அதில் “நம் இனத்துக்கான உன் போராட்டங்களும் உன் வார்த்தைகளும் இங்கு உற்று கவனிக்க படுகிறது. உன் வியர்வை வீண்போகாது. உரமாக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இளைஞர்களின் அரசியல் ஆசானே ஒருநாள் வென்றே தீருவோம். பேரன்பு கொண்ட மகன் செந்தமிழன் சீமானே வாழ்த்துக்கள்” என பதிவிட்டிருந்தார்.