நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை பொருத்தவரை யாருடனும் கூட்டணி போடமாட்டார். தனியாகத்தான் இருப்பார் . அதேபோல ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாரபட்சம் இல்லாமல் அனைத்து கட்சிகளையும் சரமாரியாக விமர்சனம் செய்து தள்ளுவார். கடந்த சில நாட்களாக சீமான் திமுக தலைமையை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். “நல்லாட்சி என்பது சட்ட விதிகளை மதிப்பது தான் உங்கள் ஆட்சியை நல்லாட்சி எனக் கூறாதீர்கள்,” எனக் கூறினார். அதோடு “ஆட்சி கையில் இருக்கும் காரணத்தால் என் தம்பிகளை கடத்தி வைத்து மிரட்டுகிறார்கள்.” எனக் கூறி இருந்தார். ஆட்சிக்கு வந்து 8 மாத காலங்களில் 8,000 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், அதனை வெளிநாட்டில் முதலீடு செய்திருப்பதாகவும், அதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளதாகவும் பகிரங்கமாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இதன் உச்சமாக “பாஜகவை எதிர்த்து திமுகவினர் குரல் கொடுத்தால் அவர்களுடைய குடும்பத்தில் பாதி பேர் திகார் சிறையில் தான் இருக்க வேண்டும்.!” என சமீபத்தில் கூறியிருந்தார். சீமான் திமுக மீது இவ்வளவு தூரம் கடுப்பாக பேசுவதற்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு சில நிறுவன தலைவர்கள் நிதி உதவி செய்து வந்தார்களாம். அவர்களை திமுகவினர் மிரட்டி இனி அவ்வாறு செய்யக்கூடாது என கூறியுள்ளனர். இதனால் நாம் தமிழர் கட்சிக்கு வரவேண்டிய நிதி சரியாக வரவில்லையாம். இதனால் கடுப்பாகிப் போன சீமான் திமுகவை இவ்வாறு விமர்சித்து வருகிறார் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.