நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது காங்கிரஸ் கட்சியினர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமார் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்து, இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்து கொண்டிருக்கின்ற உள்ளாட்சி தேர்தலின் பிரச்சாரத்தின் போது ஒரு அரசியல் கட்சியை சார்ந்த சீமான் என்பவர் காங்கிரஸ் பேரியக்கத்தை பற்றியும், காங்கிரஸினுடைய தலைவர்களை பற்றியும் மிக அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தி, கீழ்தரமாக பேசியிருந்தார்.
எந்த ஒரு சாதாரண அரசியல்வாதியாக இல்லாவிட்டாலும் கூட, சாதாரண மனிதன் கூட அது போன்ற கொச்சைத்தனமான வார்த்தைகளை பயன்படுத்த மாட்டார்கள். ஒரு நாகரீகமற்றவராக அநாகரீகத்தின் அவதாரமாக, அநாகரீகத்தையே தொழிலாக கொண்டவராக அவர் இப்பொழுது மட்டும் பேசவில்லை எப்பொழுதுமே பேசிக் கொண்டிருக்கிறார். ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி 2019 ஆம் ஆண்டு விக்ரபாண்டி இடைத்தேர்தலின் போது இதே சீமான் தான், பிரச்சாரத்திலே நாங்கள்தான் ராஜீவ்காந்தியைக் கொன்றோம், இங்கேதான் புதைத்து இருக்கின்றோம்,
என்று மார்தட்டி பேசி காவல்துறைக்கு தைரியமிருந்தால் என் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கட்டும் ராஜீவ் காந்தியை கொன்றது நாங்கள் தான் என்று சொன்னார் 2019திலே. அன்றைய தினமே நானும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் இதே அலுவலகம் வந்து அவர் மீது ஒரு புகார் மனுவை கொடுத்தோம். ஆனால் அந்த புகார் மனு என்னவானது என்று கூட எனக்கு பதில் இல்லை. இன்றைய உள்ளாட்சித் தேர்தலிலே இங்கே இருக்கின்ற காங்கிரஸ் காரர்கள் எல்லாம் ராஜீவ் காந்திக்கு பிறந்தவர்களாம், இவர்கள் எல்லாம் இப்படி ஏதோ அவருடைய பிள்ளைகள் போல் நடந்து கொள்கிறார்கள் என்றும், சோனியா காந்தி என்ற சக்காலத்தியினுடைய பிள்ளைகள் என்று மிக அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தி பேசி இருக்கின்றார்.
எனவே நாங்கள் காவல்துறையின் தலைமை அதிகாரி அவர்களை நேரில் சந்தித்து, இவர் வன்முறையைத் தூண்டுவது போன்ற பேச்சுகளை பேசி கொண்டிருக்கிறார் என்றும், இது நாட்டில் அமைதியை குலைக்கும் என்றும், காங்கிரஸ்காரர்கள் நெடுநாளைக்கு அமைதி காக்க மாட்டார்கள் என்றும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாங்கள் சொல்லி இருக்கின்றோம் என தெரிவித்தார்.