சீமான் செய்யும் ரவுடி அரசியல் என திருமுருகன் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய திருமுருகன் காந்தி, தஞ்சை டெல்டா முழுவதும் மீத்தேன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை களத்தில் நின்ற மூத்த தமிழ் தேசிய தோழர். எந்த ஊரில் எல்லாம் மீத்தேன் திட்டம் எல்லாம் வரப்போகிறது என்று சொல்கிறார்களோ அந்த ஊர்களுக்கு எல்லாம் சென்று மக்களுக்கு அதனுடைய ஆபத்துக்களைச் சொல்லி அங்கே போராட்டத்தை கட்டமைத்து அதற்கு பல்வேறு வழக்குகளை வாங்கி சிறைக்கு சென்று, இன்றும் அந்த அரசு அடக்குமுறையை எதிர்கொண்டு தமிழ் மக்களுக்காக இந்த நிலத்தை காக்க வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்ற பேராசிரியர் ஜெயராமன் அவர்கள் கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் தேசிய அரசியல் களத்தில் இருக்கக்கூடிய மூத்த செயல்வீரர்.
அவரை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகத்தின் மூலமாகவும், அவருக்கு ஆதரவாக இருக்கக்கூடிய தோழர்கள் மீது வன்முறையாக ஜனநாயக விரோதமாக நாம் தமிழர் கட்சியின் உடைய மயிலாடுதுறை பொறுப்பாளர்கள் கீழ்த்தரமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். இது அதிர்ச்சி அளிக்கக் கூடிய விஷயமாக இருக்கிறது. ஏனென்றால் இங்கே தமிழர்கள் உரிமை சார்ந்து போராடக் கூடிய பல்வேறு அமைப்புகள் பல்வேறு கருத்துக்களில் இத்தனை ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார்கள்.
தமிழர்களுக்கு போராடக் கூடியவர்கள் மீது இப்படியாக ஜனநாயக விரோதமான ஒரு நடவடிக்கையை யாரும் மேற்கொள்ளவில்லை. இது முதல் முறையாக நாங்கள் பார்க்கின்றோம், இது அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. இது பாரதிய ஜனதா கட்சி இந்த மண்ணிலே கொண்டு வர விரும்புகின்ற ஒரு அரசியலை இவர்கள் முன்நின்று நடத்தி இருக்கிறார்கள். தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களுடைய படங்களை வைத்துக் கொண்டு, தமிழ் விடுதலைப் புலிகளுடைய பெயர்களை சொல்லி கொண்டு இப்படியான ஒரு ஜனநாயக விரோத அரசியலை செய்வது என்பது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று.
அரசியல் கருத்துகளில் மாற்று இருந்தால் மாற்றுக் கருத்துக்களை முன்வையுங்கள் விவாதிக்கலாம். இன்றளவும் கூட ஈழ விடுதலை அரசியலில் தமிழில் விடுதலைப் புலிகளை ஆதரிப்பதில் திமுக கட்சியை சார்ந்தவர்களும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்தவர்களும், அதிமுகவை சார்ந்தவர்களும், காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்களும் இன்னும் எண்ணற்ற கட்சிகளைச் சார்ந்தவர்களும் அந்த ஆதரவு தளத்தில் இயங்கி இருக்கிறார்கள். ஆனால் அவர்களெல்லாம் ஒருத்தரை ஒருத்தர் இப்படியாக வன்முறையாக, கொச்சைப்படுத்துகின்ற விதமாக ஜனநாயக விரோதமாக பேசிக் கொண்டதில்லை.
இவர்கள் எல்லாரும் எதிர் நிலையில் இருந்த பொழுதிலும் கூட, தேர்தலில் எதிர் எதிராக போட்டியிட்ட போதும் கூட ஈழ விடுதலை என்று வரும் போது அனைவரும் தமிழர்கள் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இருக்கிறார்கள். இந்த பண்பாடு அரசியல் பண்பாடு தான் இந்த நிலத்தினுடைய பண்பாடாக இத்தனை ஆண்டுகள் இருந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த ஐயா நெடுமாறன் அவர்களாக இருந்தாலும் சரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவாக இருந்தாலும் சரி அல்லது பிற கட்சிகளை சார்ந்தவராக இருந்தாலும் சரி இவர்கள் பல கட்சிகளையும் கருத்துக்களையும் கொண்டிருந்தாலும் கூட ஈழவிடுதலை, தமிழர் விடுதலைப் புலிகள் என்று வரும்போது ஓரணியில் நின்று கொண்டிருக்கிறார்கள்.
அதேபோலதான் இயக்கங்களும் பல்வேறு கருத்தியல் தளத்தில் இருந்தாலும் கூட தமிழர்களின் பிரச்சனை என்று வந்தால் ஒன்றுபட்டு நின்று இருக்கிறார்கள். ஆனால் அப்படியான பண்பாடுகளை மரபுகள் எல்லாம் உடைத்து இங்கே தமிழ்தேசிய களத்தில் தமிழர்களுக்காக போராட கூடியவர்களை மிரட்டுகின்ற அரசியல் என்பது ஏற்றுக்கொள்ள இயலாதது. அது ஜனநாயக விரோதமானது. எந்த இடத்திலும் நாங்கள் அதை அனுமதிக்கப்போவதில்லை.
பேராசிரியர் ஜெயராமன் அவர்களோடு நாங்கள் அனைவரும் துணை நிற்கிறோம் இப்படியான ஒரு ரவுடி தனமான அரசியலை மேற்கொள்ளக்கூடியவர்கள் மீது அந்த கட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்படியான அரசியலை அவர்கள் உடனடியாக கைவிட வேண்டும் இல்லை என்றால் அவர்கள் அரசியல் ரீதியாக தனிமைப்பட்டு போவார்கள் என்பதை இந்த போராட்டத்தின் வழியாக பெரியாரிய உணர்வாளர் தோழமை இயக்கத்தின் வழியாக தெரிவிக்க விரும்புகிறோம் என தெரிவித்தார்.