தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சியான் விக்ரம் நடிப்பில் கோப்ரா திரைப்படம் ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்புக்கு பிறகு திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்க, மிருணாளினி ரவி, ஸ்ரீநிதி செட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், இர்பான் பதான் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனதிலிருந்தே பல நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதாவது கோப்ரா திரைப்படம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் ஓடியது. இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய குறையாக பார்க்கப்பட்டதால், படத்தின் நீளத்தில் 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியான விக்ரம் திரைப்படம் குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து பதிலளித்துள்ளார்.
அதாவது ரசிகர் ஒருவர் திரைக்கதை குழப்பமாக இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு படத்தை நீங்கள் இன்னொரு முறை பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று அஜய் ஞானமுத்து கூறினார். அதோடு திரைக்கதை குழப்பமாக இருந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள் என்றும் கூறினார். அதன்பின் மற்றொரு ரசிகர் இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவின் படமா இது என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நீங்கள் ஏமாற்றம் அடைந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள். அடுத்த முறை உங்கள் தேவையை பூர்த்தி செய்வேன் என்றார். மேலும் பல ரசிகர்கள் விக்ரமின் நடிப்பை வீணடித்துவிட்டதாக அஜய் ஞானமுத்துவை இணையத்தில் விளாசுகின்றனர்.