சீல் வைக்கப்பட்ட அனுமதியற்ற குடிநீர் ஆலைகள் புதிதாக விண்ணப்பிக்கலாம் , அதனை தமிழக அரசு பரிசீலிக்கவும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டவிரோதமாக இயங்கி வரும் குடிநீர் ஆலைகளை மூடக்கோரி சிவமுத்து என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சட்டவிரோத ஆலைகளை மூடி சீல் வைத்து மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து சட்டவிரோதமாக செயல்படும் கேன் குடிநீர் ஆலைகள் சீல் வைக்கப்பட்டன. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழகம் முழுவதும் 682 குடிநீர் ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக அரசு அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து குடிநீர் ஆலைகள் கடந்த காலங்களில் செய்த சட்டவிரோத செயல்களுக்கு உரிய விலை கொடுக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.
மேலும் போராட்டம் மூலம் நீதிமன்றத்துக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். இயற்கை வளமான தண்ணீரை இலவசமாக எடுக்க அனுமதி அளித்தது வியப்பை அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் மூடப்பட்ட குடிநீர் ஆலைகளை தற்காலிகமாக இயங்க அனுமதிப்பது குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது சீல் வைக்கப்பட்ட அனுமதியற்ற குடிநீர் ஆலைகள் புதிதாக விண்ணப்பிக்கலாம் , அதனை தமிழக அரசு பரிசீலிக்கவும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விண்ணப்பத்தோடு 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் சட்ட விரோத நிறுவனங்களை கண்காணிக்க கண்காணிப்பு குழுவை அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நிலத்தடி நீரின் அளவை மீண்டும் அளவிட்டு 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.