மேக்காமண்டபத்தில் உள்ள இறைச்சிக் கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், கோதநல்லூர் பேரூராட்சியில் உள்ள மேக்காமண்டபத்தில் 7-க்கும் அதிகமான இறைச்சி கடைகள் அமைந்துள்ளன. இந்த கடைகளிலிருந்து வெளிவரும் இறைச்சி கழிவுகள், கழிவுநீர் ஆகியவற்றை மழைநீர் வடிகால் ஓடையில் விடுவதால் சுகாதார கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இப்புகாரின் பேரில் சுற்றுச்சூழல் துறை அலுவலர் சுயம்பு தங்கராணி அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி நேற்று காலை கோதநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரி தலைமையில் தக்கலை வட்டார சுகாதார அலுவலர் ராஜன், மனோகரன் மேற்பார்வையாளர் செல்வம், பேரூராட்சி தலைவர் கிறிஸ்டல் பிரேமகுமாரி, ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் மேக்காமண்டபம் பகுதிக்கு சென்றார்கள். அதன்பின் அங்கு விதிகளை மீறிய கடைகளை பூட்டி சீல் வைக்க முயன்றபோது, வியாபாரிகள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.
இதை அடுத்து தங்களுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். உடனே அதிகாரிகள் பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படாத வகையில் கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் தான் கடையை திறக்க முடியும் என்று கூறி கடைகளை பூட்டி சாவியை வாங்கி சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.