விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கொரோனா தொற்று உறுதியாகிய நோயாளிகள் சிகிச்சைக்கு செல்ல மறுத்து சுகாதாரத்துறை ஊழியர்களை அலைக்கழித்ததுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அருப்புக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட குல்லூர் சந்தை பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் தொள்ளாயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் உள்ளனர். அவர்களுக்கு கடந்த 2 நாட்களுக்கு சிறப்பு பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது அதில் 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
அவர்களில் நான்கு பேர் மட்டுமே சிகிச்சைக்கு ஒத்துழைத்து மருத்துவமனைக்கு சென்றனர். மீதமுள்ளவர்கள் மருத்துவமனைக்கு செல்ல மறுப்பு தெரிவித்ததுடன் வீடுகளிலும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் ஊர் சுற்றி வந்துள்ளனர். தகவலறிந்த சுகாதாரத்துறை ஊழியர்கள் அவர்களை அழைத்து செல்ல நேரில் சென்றனர். ஆனால் மூன்று நபர்கள் மருத்துவமனைக்கு வர மறுத்து ஊழியர்களை 6 மணி நேரத்திற்கும் மேலாக காக்க வைத்ததுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்பு எஞ்சிய 12 நபர்களையும் சுகாதாரத்துறை ஊழியர்கள் சிகிச்சைக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றனர்.