கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது மோதிய விபத்தில் ஆசிரியர் உடல் நசுங்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி சித்தூர் சாலை கே.கே நகரில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு காவியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ராஜேஷ் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டைக்கு காரில் சென்றுள்ளார். இந்த கார் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்த லாரியின் பின்புறம் பலமாக மோதியது.
இந்த விபத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கிவிட்டது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி ராஜேஷ் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் படுகாயமடைந்த மகேஸ்வரி மற்றும் காவியா ஆகிய 2 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேஷின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.