கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் ஒருவர் பலியான நிலையில், 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அகரப்பட்டி பகுதியில் கபடி வீரரான சேகர்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான திருப்பதி, மதி, ஆனந்தன், சரவணன், மாரிமுத்து, கண்ணன், வெள்ளைச்சாமி ஆகியோருடன் காரில் விராலிமலை- அன்னவாசல் சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் இலுப்பூர் குடிசை மாற்று வாரியம் அருகே வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடியது.
பின்னர் கார் சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சேகர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை எடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 7 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேகரின் உடலை மீட்டு இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.