டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் தந்தையும், 6 மாத குழந்தையும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை சேர்ந்த அஸ்வின்குமார் என்பவர் தனது மனைவி சிவபாக்கியம், மகள் திவானா, ஆறு மாத ஆண் குழந்தை ஆகியோருடன் சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றுள்ளார். இந்நிலையில் மீண்டும் அஸ்வின்குமார் தனது குடும்பத்தினருடன் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் புக்கத்துறை கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது சாலையோரம் நின்ற டேங்கர் லாரி மீது நிலைதடுமாறிய கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் அஸ்வின்குமார் மற்றும் ஆறு மாத ஆண் குழந்தை இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர்.
இதனைஅடுத்து படுகாயமடைந்த சிவபாக்கியம், திவானா ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அஸ்வின்குமார் மற்றும் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.