டெம்போ மீது லாரி மோதிய விபத்தில் கோழி இறைச்சி கடை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கணேசபுரத்தில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் முருகன் தனது நண்பரான சுப்பிரமணியன் என்பவருடன் கடைக்கு தேவையான கோழிகளை வாங்குவதற்காக டெம்போவில் பணகுடி நோக்கி சென்றுள்ளார். இந்த டெம்போவை எப்சன் ராஜ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் வெள்ளமடம் கிறிஸ்து நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது செங்கல் லோடு ஏற்றி சென்ற லாரி டெம்போ மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் டெம்போ சுக்குநூறாக நொறுங்கி விட்டது.
இதனால் இடிபாடுகளில் சிக்கி முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து படுகாயமடைந்த ராஜ், சுப்பிரமணியன், லாரியில் பயணித்த ஜெகன், டென்னிசன், கணேசன், சேகர் ஆகியோரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.