பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூரில் இருந்து ஈரோடு மாவட்டம் நோக்கி அரசு விரைவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலை நாகம்பட்டி பிரிவில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரியின் ஓட்டுனர் பிரேக் பிடித்துள்ளார். இதனால் குமாரும் பிரேக் பிடித்து பேருந்தை நிறுத்தியுள்ளார். அந்த சமயம் நாமக்கல் நோக்கி பருப்பு மூட்டைகளை ஏற்றி சென்ற மற்றொரு லாரி அரசு பேருந்தின் பின் பகுதியில் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இதனையடுத்து இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த லாரி ஓட்டுனரான வேல் முருகன் என்பவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.