கட்டுப்பாட்டை இழந்த லாரி மரத்தில் மோதி சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள நல்லூர் கிராமத்தில் முரளி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று காலை லாரியில் கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு அரக்கோணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சிறுங்கோழி அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்துவிட்டது. இதனால் லாரியில் இருந்த கியாஸ் சிலிண்டர்கள் சாலையில் விழுந்து உருண்டு ஓடியது.
இந்த விபத்தில் லாரி முழுவதும் சுக்குநூறாக நொறுங்கியது. மேலும் முரளி அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களின் உதவியுடன் கியாஸ் சிலிண்டர்களை ஓரமாக அடுக்கி வைத்தனர். அதன்பிறகு கவிழ்ந்து கிடந்த லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.