வேன் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலியான நிலையில், 11 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கே.கே நகரில் மோகன்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் தஞ்சாவூரில் இருக்கும் குலதெய்வ கோவிலுக்கு ஒரு வேனில் சென்று கொண்டிருந்தார். இந்த வேனை பாலசுப்பிரமணியம் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலை தங்கநகரம் அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த டேங்கர் லாரி வேன் மீது பயங்கரமாக மோதியது. இதனால் நிலைதடுமாறிய வேன் சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதனைஅடுத்து படுகாயமடைந்த மோகன்தாஸ், அவரது மனைவி லோகநாயகி, உறவினர்களான சாரதாதேவி, ஜெகதீஸ், வேதவள்ளி உள்பட 11 பேரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலசுப்பிரமணியனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.