மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் அருகில் கப்பலூரில் சுங்கச்சாவடி இருக்கிறது. நேற்று அதிகாலை மதுரையிலிருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டு சிவகாசி நோக்கி கனரக லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி கப்பலூர் சுங்கச் சாவடி வசூல் மையத்திற்குள் நுழைந்தது. அப்போது லாரியின் முன்புறம் ஒட்டப்பட்டிருந்த “பாஸ்ட் டிராக்” ஸ்டிக்கர் ஸ்கேன் ஆகவில்லை என கூறப்படுகிறது.
இதன் காரணமாக பணியிலிருந்த திருமங்கலம் சொக்கநாதன்பட்டியைச் சேர்ந்த தினேஷ் என்ற ஊழியர் அந்த லாரிக்கான கட்டணத்தை வசூலிக்க தான் வைத்திருந்த ஸ்கேன் கருவி வாயிலாக லாரியில் ஒட்டப்பட்டிருந்த பாஸ்ட் டிராக் ஸ்டிக்கரை ஸ்கேன் செய்யும் பணியில் ஈடுபட்டார்.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக அந்த காய்கறி லாரிக்கு பின்னால் வந்த மற்றொரு சரக்கு லாரி அதன் மீது மோதிவிட்டது. இதன் காரணமாக காய்கறி லாரியானது நகர்ந்து ஊழியர் மீதுமோதியது. இதனால் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.