ஓசூர் ஆர்டிஓ வாகன சுங்கச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக கர்நாடக எல்லையான ஜுஜுவாடி பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனை சாவடி செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் பணம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆர்டிஓ அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.
3 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளரிடம் இது குறித்து துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.