திறமையான கலைஞர் சுஷாந்த் சிங் மரணம் பற்றி உச்சநீதிமன்ற நீதிபதி ராய் கருத்துக் கூறியிருக்கிறார்.
கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்றை மூலமாக கொண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலமாக பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் பிரபலமானார். கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி மும்பை பாந்த்ராவில் இருக்கின்ற தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் கூறினர். தொடர்ந்து அவரின் நெருங்கிய தோழியான நடிகை ரியா சக்ரபோர்தி, சுஷாந்த் சிங்கின் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் சில நாட்களுக்கு முன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் நடிகை ரியா மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே சிங் பாட்னா காவல்துறையில் புகார் அளித்திருந்தார். அவர் அளித்த புகாரின் சுஷாந்திடம் நிதி மோசடியில் ஈடுபட்டு மன ரீதியாக அவரை துன்புறுத்தியதாக குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ரியா மீது தற்கொலைக்கு தூண்டியது மற்றும் நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இருப்பதாக மத்திய மண்டல ஐ.ஜி சஞ்சய் குமார் கூறியுள்ளார். மேலும் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு பரிந்துரைக்க முடிவு செய்திருப்பதாக பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
சுஷாந்தின் தந்தை கிருஷ்ணகுமார் சிங்கின் கோரிக்கையை ஏற்கும் வகையில் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். சுஷாந்த் மரண வழக்கை மும்பை காவல்துறை விசாரித்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில் சுஷாந்த்தை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது தந்தை, நடிகை ரியாவுக்கு எதிராக கொடுத்த புகாரை பாட்னா காவல்துறை விசாரித்துக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த வழக்கை பீகார் மாநில அரசு நடத்தி வருகிறது. பீகார் மாநிலத்தில் விசாரிக்கப்படும் வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரி சுஷாந்த் சிங்கின் காதலி ரியா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்து இருந்தது.
அச்சமயத்தில் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு பரிந்துரைக்க பீகார் அரசு முடிவு செய்ததை ஏற்றுக்கொள்வதாக மத்திய அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதி ரிஷிகேஷ் ராய் கூறுகையில், இந்த மரணம் ஏற்பட்டது ஒரு துரதிர்ஸ்டவசம். திறமையான கலைஞன் அசாதாரணமான சூழலில் உயிரிழந்துள்ளார். எந்த சூழ்நிலையால் இந்த மரணம் நிகழ்ந்தது என்பதை விசாரிக்க வேண்டும். இந்த மரணம் பற்றி எல்லோருக்கும் பல்வேறு கருத்துகள் இருக்கின்றன. இருந்தாலும் இந்த வழக்கை சட்டப்படியே விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.