சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆடிமாத களப பூஜை சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் தொடக்கத்தில் கற்கடக ஸ்ரீபலி விழா நடைபெறுவது வழக்கமாக இருக்கின்றது. அதன்படி இந்த ஆண்டு ஆடி மாதம் தொடங்கியதை முன்னிட்டு கற்கடக ஸ்ரீபதி விழா நடைபெற்றது. இதனையடுத்து கோவிலில் நடைபெறும் நித்திய காரியபூஜைகள் முடிவு பெற்ற பின் மாலை 6.30 மணிக்கு மேல் ரிஷப வாகனத்தில் சிவபெருமானையும், கருட வாகனத்தில் பெருமாளையும் எழுந்தருளச்செய்து கோவிலை சுற்றிலும் 3 முறை ஸ்ரீபலி நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து ஆடிமாதம் நடைபெறும் களப பூஜைகள் தொடங்கியது. இந்த களப பூஜை வருகின்ற 30-ஆம் தேதி வரை 13 நாட்கள் தொடர்ந்து நடைபெற இருக்கின்றது. எனவே தினசரி காலை நடைபெறும் வழிபாடுகள் அனைத்தும் நிறைவடைந்த பின் 10 மணிக்கு சுவாமி சன்னதியில் களப பூஜை நடைபெறுகின்றது. அப்போது நறுமணங்கள் கலந்த சந்தனத்தை அரைத்து தாணுமாலய சுவாமிக்கு அபிஷேகமும் பின் அலங்கார தீபாராதனையும் நடைபெறுகின்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில்களின் இணை ஆணையர் செல்வராஜ் தலைமையில் தாணுமாலய சுவாமி கோவில் மேலாளர் சண்முகம் பிள்ளை செய்து வருகின்றார்.