செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தமிழகத்தில் வண்ணார், புதிரை வண்ணார் சமூகத்தைச் சார்ந்தவர்கள் அனைத்து தரப்பினராலும் புறக்கணிக்கப்பட கூடியவர்களாக உள்ளனர். அரசும் அவர்களை பொருட்படுத்துவதில்லை, காலம் காலமாக அவர்கள் ஊராரை நம்பி மட்டுமே வாழும் அவலம் தொடர்கிறது. அவர்களுக்கென குடியிருப்பு இல்லை, இறந்த பிறகு அடக்கம் செய்வதற்கான இடுகாடு அல்லது கல்லறையில் வசதி இல்லை, அனைத்துக்கும் பிற சமூகத்தினரை சார்ந்து வாழ வேண்டிய ஒரு நெருக்கடி உள்ளது.
இந்த அவலத்தை பொதுவெளியில் மைய நீரோட்டத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் காணமல் போன கல்லறைகள் என்னும் பெயரில் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. தமிழகம் முழுவதுமுள்ள புதிரை வண்ணார் சமூகத்தினரின் கோரிக்கைகளை அவலங்களை எடுத்து விளக்கும் வகையில் தனித்தனியாக பேட்டி எடுத்து இது ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான புதிரை வண்ணார்கள் கிருத்துவத்தை தழுவியவர்களாக இருக்கிறார்கள்.
ஆகவே அவர்களை அரசு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வைத்திருக்கிறது. இதனால் எந்த நலத்திட்டங்களையும் அவர்கள் நுகர முடியவில்லை, அரசு நலத்திட்டங்களின் பயன்களைப் பெற முடியவில்லை. எனவே புதிரை வண்ணார் சமூகத்தினரை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். முழுமையாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும், அவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும், மனை பட்டா வழங்க வேண்டும், இறந்த பிறகு அடக்கம் செய்வதற்கு கல்லறைகள் தேவை போன்ற இந்த கோரிக்கைகளை அரசு பரிசீலிக்க வேண்டும்.
சாதியின் பெயரை இன்விகுதி உள்ளது வண்ணான், புதிரை வண்ணான் என்று உள்ள நிலையை மாற்றவேண்டும், வண்ணார், புதிரை வண்ணார் என்று சான்றிதல் வழங்க வேண்டும். சான்றிதல் பெரும்பாலும் இந்த சமூகங்களைச் சார்ந்த பிள்ளைகளுக்கு வழங்கப்படுவதில்லை. கேட்டால் இந்த மாவட்டங்களில் புதிரை வண்ணார் சமூகத்தினர் இல்லை, அரசு எந்த கணக்கெடுப்பும் நடத்தாமலேயே ஆய்வு செய்யாமலேயே ஆய்வு செய்யாமலேயே தவிர்க்கும் நிலை உள்ளது.
திருச்சபை சார்பிலும் இவர்களுக்கு கல்லறை வசதி செய்து தரப்படவில்லை என்பதை இந்த ஆவணப்படத்தின் மூலம் கூறுகிறார்கள். எனவே தான் சார்ந்திருக்கிற திருச்சபைகளாலும் புறக்கணிக்க படுகிறோம், சமூகத்தினரால் புறக்கணிக்கப்படுகிறோம், ஆட்சியாளர்களாலும் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற அவலத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிற இந்த ஆவணப்படம் காணாமல்போன கல்லறைகள் என்கிற இந்த குறும்படம் ஜனநாயக சக்திகளின் நெஞ்சத்தை உலுக்கும் ஒரு ஆவணப் படம் ஆகும், ஜனநாயக சக்திகள் அனைவரும் சேர்ந்து விளிம்புநிலை மக்களின், கவனிக்கப்படாத சமூகங்களாக உள்ள, மிகமிக சிறுபான்மை சமூகமாக உள்ள, வண்ணார், புதிரை வண்ணார் போன்ற சமூகத்தினரின் நலன்களுக்கு குரல் எழுப்ப வேண்டும் என தெரிவித்தார்.