எரிவாயு மின்தகன வளாகத்தில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கே.கே.நகரில் ஜெகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜோதி என்ற மனைவியும், தனுஷ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ஜெகநாதன் ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் சுடுகாட்டில் உள்ள எரிவாயு மின்தகன வளாகத்தில் பிணங்களை எரிக்கும் தொழில் செய்து வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதனால் கணவரின் வேலையை ஜோதி செய்து வந்த நிலையில் தனுஷ் அடிக்கடி அங்கு சென்று தாய்க்கு உதவி செய்வது வழக்கம்.
இதனையடுத்து நேற்று முன்தினம் ராமநாதபுரத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது உடலை தகனம் செய்வதற்கு உறவினர்கள் கொண்டு சென்றுள்ளனர். அப்போது அதில் இருந்த ஒருவர் மின்தகன இடத்தில் வைத்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தனுஷ் தட்டிகேட்டதால் ஆத்திரமடைந்த அந்த நபர் கத்தியை வைத்து சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த தனுஷை அங்கிருந்தவர்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தகவலறிந்து சென்ற ராமநாதபுரம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தனுஷை தாக்கிய நபரை தேடி வருகின்றனர்.