மதுரையில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க போகும்போது எதுவும் பிரச்சனை ஏற்பட்டால் தங்களை பாதுகாத்துக்கொள்ள துப்பாக்கியை பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்து காணப்படும் சூழலில், மதுரை மாவட்டத்தில் இப்படி ஒரு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பது குற்றவாளிகள் மற்றும் இளைஞர்களுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக மாநிலத்தில் போலீசார் மீதான வன்முறை அதிகரித்து வருகின்றது. கடந்த ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடியில் சுப்பிரமணியன் என்ற போலீஸ் குண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து போலீசார் மீது நடத்தப்படும் வன்முறை தாக்குதலில் இருந்து தடுக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். டிஜிபி இந்த உத்தரவை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைக்க தொடங்கியுள்ளனர்.
அதன்படி மதுரையிலும் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா பல்வேறு பணிகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளார். மதுரையில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை தடுக்க சிறப்பு தனிப்படைகள் அமைத்து உள்ளார். அதேபோல் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் பல்வேறு போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பணிகளை மேற்கொண்டு வரும் கமிஷனர் இதற்கு இடையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது “குற்றச்செயல்கள் குற்றவாளிகள் குறித்து தகவல் கிடைத்தால் தாமதிக்காமல் உடனே சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. போலீசார் தங்களை பாதுகாக்க துப்பாக்கியை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது”. இதற்கிடையே 67 வாகனங்களில் சிறப்பு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீபாவளி சமயத்தில் மாவட்டத்தின் முக்கிய தெருக்களில் கொலை, கொள்ளை, கத்திசண்டை, ஊர் சண்டை என குற்றச்செயல்கள் அதிகரித்து காணப்பட்டது. இந்த சூழலில் இப்படியொரு உத்தரவுடன் போலீசார் கையில் துப்பாக்கியுடன் ரோந்து வருவது மாவட்ட இளைஞர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.