கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து, கால்நடைகளளை பராமரிப்பது எப்படி என்பது குறித்து, விஞ்ஞானிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
தமிழ்நாடு வானிலை பல்கலைக்கழகம், இந்திய வானிலை துறை மற்றும் கோவை வேளாண் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இணைந்து, திருப்பூர் மாவட்டத்தின் வாராந்திர காலநிலை மற்றும் அந்த சமயத்தில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறை குறித்து ஆலோசனை வழங்கி வருகின்றன.
அதன்படி, ‘இந்த வாரம், அதிகபட்சம், 36 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைக்கும்’ என, கூறப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில், கால்நடை பராமரிப்பில் விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. பகல் நேர வெப்பநிலை உயர்ந்து, காற்றின் ஈரப்பதம் குறைந்திருக்கும் என்பதால், கால்நடை மற்றும் கோழிகளுக்கு போதுமான அளவு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்.
அதிகபட்ச பகல் நேர வெப்பநிலை மற்றும் காற்றின் வேகம் மணிக்கு, 10. கி. மீ. , க்கும் மேல் வீச வாய்ப்புள்ளதால், கோழி மற்றும் மாட்டுப்பண்ணையில், வெப்பத்தை குறைக்க, கூடாரத்தின் ஓரத்தில் நனைந்த சாக்கு தொங்கவிட வேண்டும். அல்லது, கூடாரத்தின் மேற்கூரையில் தண்ணீர் தெளிக்க வேண்டும். கோழிகளின் இறப்பை தவிர்க்க, தேவையான அளவு சுத்தமான தண்ணீர் வழங்க வேண்டும். கால்நடைகளுக்கு, கோமாரி நோய் தடுப்பூசியை, அருகேயுள்ள கால்நடை மருத்துவமனைகளில் செலுத்த வேண்டும். இவ்வாறு, விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.