நாடு முழுதும் 75வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு வீடுகள், அரசு அலுவலகங்கள் உட்பட அனைத்து கட்டிடங்களிலும் 3 நாட்கள் தேசியகொடி பறக்கவிடப்படுகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாநகராட்சியில் 40,000 வீடுகள், பழனி நகராட்சியில் 12,875 வீடுகள், கொடைக்கானல் மற்றும் ஒட்டன்சத்திரம் போன்ற நகராட்சிகளில் தலா 12,000 வீடுகள், 23 பேரூராட்சிகளில் 1 லட்சத்து 7ஆயிரத்து 100 வீடுகள், 306 ஊராட்சிகளில் 4 லட்சத்து 6 ஆயிரத்து 437 வீடுகள் என மொத்தம் 5 லட்சத்து 91 ஆயிரத்து 22 வீடுகளில் தேசியகொடி ஏற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இதனால் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அடிப்படையில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
இவற்றில் மற்றொரு நிகழ்வாக மாவட்ட நிர்வாகம் மற்றும் ஜி.டி.என். கலைக் கல்லூரி சார்பாக திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தேசிய கொடியின் மூவர்ணத்தில் ராட்சத பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கலெக்டர் விசாகன் அதில் பங்கேற்று ராட்சத பலூனை பறக்கவிட்டார். இந்த பலூன் சுதந்திரதினமான நாளை வரை பறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாநகராட்சி மேயர் இளமதி, துணைமேயர் ராஜப்பா, ஆணையர் சிவசுப்பிரமணியன், ஜி.டி.என். கல்லூரி தாளாளர் கே.ரெத்தினம், கல்லூரி இயக்குனர் துரை, கல்லூரி முதல்வர் பால குருசாமி, கவுன்சிலர் வெங்கடேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.